search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவிலியர்கள் தாமதம்"

    விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், செவிலியர்கள் தாமதமாக வந்ததால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் விளாங்குடியை சுற்றியுள்ள வி.கைகாட்டி, ரெட்டிபாளையம் அம்பாபூர், தேளூர், ஓரத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்பதால் கர்ப்பிணிகள் அதிக அளவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    நேற்று பல்வேறு கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெறுவதற்காக பலர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்தனர். நீண்ட நேரமாகியும் டாக்டர்களோ, செவிலியர்களோ யாரும் வராததால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் கர்ப்பிணிகள் ஓரிடத்தில் உட்கார முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மருத்துவர்கள் எப்போது வருவார்கள் என நோயாளிகளை பதிவு செய்யும் அலுவலரிடம் கேட்டால் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்று கூறியதையடுத்து நோயாளிகள் காத்திருந்தனர்.

    10 மணிக்கு மேல் வந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் காத்திருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என உள்ள நிலையில் செவிலியர்கள் கூட இல்லாமல் மருத்துவமனை இயங்கி வருகிறது. இது குறித்து சிகிச்சைக்காக கர்ப்பிணியை அழைத்து வந்த உறவினர் ஒருவர் கூறியதாவது:-

    காலை 6 மணிக்கு சிகிச்சை பெறுவதற்காக எனது உறவினரான கர்ப்பிணியை கூட்டி வந்தேன். ஆனால் நீண்ட நேரமாகியும் டாக்டர்களோ, செவிலியர்களோ வராததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும் என கூறிவிட்டு டாக்டர்கள் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. எனவே அவசர சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×